கனடாவில் சிறுவர்களை தனித்தே வீட்டில் விடலாமா?

Submitted on திங், 04/24/2017 - 09:27

அண்மையில் ஒரு வீட்டிற்குத் தபால் விநியோகிக்கச் சென்ற ஒருவர் கதவைத் தட்டிய போது சிறிய குழந்தையொன்று கதவைத் திறந்தது. அந்தப் பிள்ளையிடம் அவர் உங்களின் அம்மா, அப்பாவைக் கூப்பிடுங்கள் என்ற போது அந்தப் பிள்ளை அவர்கள் இல்லை என்று பதிலளித்தது.

தபால் விநியோகக்கச் சென்றவர் நல்லவராக இருந்தபடியால் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அதிகாரிகள் வரும்வரை அங்கிருந்து பிள்ளையை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்துச் சென்றார். இது தமிழ்ப் பெற்றோர்களிடையே எந்த வயதில் பிள்ளைகளைத் தனியே வீட்டில் விட்டு விட்டுச் செல்லலாம் என்பது பற்றிய ஒரு சிந்தனையோட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

பெற்றோர்களிற்கே தங்கள் பிள்ளைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆதலால் தமது பிள்ளைகளின் முதிர்ச்சி, அனுபவம் மற்றும் நிலைமைக்கு ஏற்றவாறு பெற்றோர் எடுக்கும் முடிவைப் பொறுத்து பிள்ளைகளை தனித்து வீட்டில் விடமுடியும்.

கனடாவைப் பொறுத்தவரை ஒன்டாறியோவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் “சிறார் மற்றும் குடும்ப சேவைகளுக்கான சட்டம்” இருக்கின்றது. அநேகமாக எல்லா மாகாணங்களுமே ஒரே மாதிரியான சட்டத்தையே கொண்டிருக்கின்றன.

பெற்றோர் எந்த வயதில் தமது பிள்ளைகளை வீட்டில் தனித்துவிடலாம் என்று ஒரு குறிக்கப்பட்ட வயது எல்லையை ஒன்றாரியோ மாகாணத்தில் நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் அது பத்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்வதானல் 12 வயதிற்கு மேற்பட்ட ஒரு பிள்ளையின் மேற்பார்வை தேவை என்று சொல்கின்றது.