வாகனப் பயிற்றுவிப்பாளருக்கு வந்த சோதனை

Submitted on வியா, 04/20/2017 - 10:32

ஸ்காபுறோ, விடோரியா பார்க் அண்ட் லாரன்ஸ் சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள வாகன வீதிப்பரீட்சை நடைபெறும் நிலையத்தில் வீதிப்பரீட்சை எடுத்துக்கொண்ட ஒரு கற்றுக்குட்டி வாகன ஓட்டுநர் தனது பயிற்றுவிப்பாளருக்கு வாகனத்தால் மோதிய சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்படி இடத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திற்கு வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் ஒரு எல்லைக்கம்பம் மீது முதலில் தான் செலுத்திய வாகனத்தை மோதியுள்ளார். இதனால் ஏற்பட்ட சேதத்தை பார்ப்பதற்காக இறங்கிய பயிற்றுவிப்பாளர் மீது வாகனத்தை பின் நோக்கி செலுத்தி மோதியுள்ளார். இதன் பிற்பாடும் தொடர்ந்து வாகனத்தை பின்னோக்கி செலுத்திய கற்றுக்குட்டி ஓட்டுநர் ஒரு 50 வயதான பாதசாரி மீதும் வாகனத்தை ஏற்றி, பாதசாரியை குறிப்பிட்ட தூரமளவுக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பாதசாரியும் பயிற்றுவிப்பாளரும் உயிர் ஆபத்தற்ற காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்துக்குட்டி காரோட்டி தனது வீதி வாகன பரீட்சையில் தேறினாரா?, அல்லது அவர் மீது வீதிப் போக்குவரத்து சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தார்களா?, என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி!