கனடாவுக்குப் பிறந்த நாள் நல்வாழ்துக் கூறுகிறோம்

Submitted on திங், 04/24/2017 - 10:04

கனடா  உலகின் மிகச் சிறந்த நாடுகளில்  ஒன்று.  உலகின் பத்து  செல்வச் செழிப்பு நாடுகளில் கனடா  ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. முதலாவது இடத்தில் நோர்வே இருக்கிறது.  கனடாவின் 150 ஆவது பிறந்த நாள் யூலை 01, 2017 என்றாலும்  இம்முறை  அது ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதற்காக கனடிய அரசு  $210 மில்லியனை  ஒதுக்கியுள்ளது. இந்த நிதி சமூக, பண்பாட்டு உள்கட்டுமானத்தைச் செப்பனிடுதல், விரிவுபடுத்தல், மேம்படுத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

150 ஆவது பிறந்த நாள் என்பது கனடா நாடு யூலை 01, 1867 இல்  பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக்  மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ரேறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்ட நாளாகும். இந்த நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது. பின்னர் 1982 இல் கனடாச் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது.

1885 இல் கனடிய பசிபிக் தொடருந்து பாதை அமைக்கப்பட்டது. 1982 இல்  ஐக்கிய இராச்சியம் எஞ்சியிருந்த அதிகாரங்களை கனடாவிடம் பாரப்படுத்தியது. 1995 இல் கியூபெக் மாகாணம் பிரிந்து  போவதா  இல்லையா என்று நடத்தப்பட்ட நேரடி வாக்கெடுப்பில் பிரியக் கூடாது என்ற பக்கம்  ஒரு விழுக்காட்டில் வெற்றிபெற்றது.

ஐரோப்பிய நாட்டு குடியேறிகள் இங்கு வருமுன்னர்,  செவ்விந்தியர் (Red Indians) என்று அழைக்கப்படும்  பழங்குடி மக்களது தாய் நாடாக கனடா விளங்கியது. கனடிய தொல்குடிமக்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மூன்று கூறுகளாக  அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.

கனடிய செவ்விந்தியர்கள் , இனுவிட் (Inuit), மெட்டிஸ் (Metis)  என மூன்று கூறுகளாக  அரசியல் சட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய   தொல்குடிமக்கள் பலவகைப்படுவார்கள்.

செவ்விந்தியர் அல்லது Red Indians  என்ற சொல் இழிவானதாகக் கனடிய  தொல்குடிகள் கருதியதால், அவர்கள் முதற் குடிகள் (First Nation) என்று அழைக்கப்படுகிறார்கள். இம் மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.

சமவெளி மக்கள் (Plains) இறொக்குவா குடிகள் (Iroquoian Nations) வட வேட்டுவர் (Northern Hunters) வட மேற்கு மக்கள் (Northwest Cost) அல்கோன்க்கிய குடிகள் (Algonkian Nations) பீடபூமி மக்கள் (Plateau).

கனடாவின் மிகக் குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்கள்  எஸ்கிமோ என்று அழைக்கப்பட்டனர்.  பின்னர் அந்தப் பெயர் இழிவாகக் கருதப்பட்டதால் அது மாற்றப்பட்டது.   தொல்குடிமக்களோடு ஐரோப்பியர் கலந்த மரபினர் மெட்டிஸ் எனப்பட்டனர். கனடா என்றவுடன் விலங்குகளின் தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட ‘வீடுகளில்’ வாழும் இனுவிட் மக்களைச் சுட்டுவது மரபாக இருந்தது.

கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடாகும்.  கிழக்கே அட்லாந்திச் சமுத்திரம் மேற்கே பசிவிக் சமுத்திரம் வடக்கே ஆர்க்டிக் சமுத்திரம்  இருக்கின்றன. கனடாவின் தெற்கு  மற்றும் வடமேற்கு  எல்லை அமெரிக்கா ஆகும்.

உலகத்தின் முதல் பத்து பணக்கார நாடுகளில் கனடா  ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. முதலாம் இடத்தில் நோர்வே இருக்கிறது. கனடா குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் அமெரிக்க டொலர் 51,958 ஆகும்.  கனடாவின் பரப்பளவு 9,984,670 சதுர கிமீ ஆகும்.  மக்கள் தொகை 3.6 கோடி மட்டுமே.   இன்றைய கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆட்சிமுறை  நிலவும் சனநாயக நாடாகும்.

பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும் அதனைத் தொடர்ந்து 1608 இல் கியூபெக்கிலும் முதன் முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 இல் குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களைக் கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்களில்  பெரும்பான்மையோர் இரையானார்கள். இந்த நோய்க் கிருமிகளை  வெள்ளைநிற குடியேறிகள் திட்டமிட்டுப் பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா பிரித்தானிய வட அமெரிக்க சட்ட (British North American Act) மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருப்பெற்றது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. நியூ பின்லாந்து (New Foundland) 1949 இல்  கனடாவுடன் இணைந்த கடைசி மாகாணம் ஆகும்.

கனடா பல்லின மக்கள் வாழும் நாடு என்பது தெரிந்ததே. ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகள்  அரச மொழிகளாகும். 1988 இல் கனடாவின் அரசமொழிகளாக ஆங்கிலம் மற்றும்  பிரஞ்சு மொழிகள் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு  மொழிகளையும் வீட்டில் 86.3%  பேசுகிறார்கள்.  கனடாவில்  இருநூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. 

ஆங்கிலம், பிரஞ்சு மொழி பேசுபவர்களை அடுத்து சீனமொழி பேசுவோரே அதிகமாக வாழ்கிறார்கள்.  கனடிய குடிமதிப்புக் கணக்கின்படி 1,487,580 (4.7 விழுக்காடு) சீனர்கள் வாழ்கிறார்கள். கனடாவில் குடிமதிப்பு கணக்கு எடுக்கும் போது இன அடையாளம் கேட்கப்படுவதில்லை. வீட்டில் வழக்கமாகப் பேசும் மொழி எது என்றுதான் கேட்கப்படுகிறது. இதனால் ஒரு தமிழர் வீட்டில் பேசுகிற மொழி ஆங்கிலம் என்று சொன்னால் அவர் ஆங்கிலேயராகக் கணிக்கப்படுவார்.

கனடா பன்முகத்தன்மையை அதிகளவு  போற்றி வளர்க்கிறது. அதனை அதன் பலமாகக் கருதுகிறது. ஒவ்வொரு சமூகமும் அதன் மொழி, கலை, பண்பாடு போன்றவற்றை மேப்படுத்த ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.  இதில் கனடா உலகின் ஏனைய பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கு மிகச்  சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

கனடாவில் தைத் திங்களை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என அனுட்டிப்பதற்கான  தீர்மானம் கடந்த ஒக்தோபர் மாதம் கனடிய  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கொண்டுவந்தார். ஒன்ரேறியோ நாடாளுமன்றத்திலும் இங்குள்ள உள்ளாட்சி மன்றங்களிலும் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கனடிய அரசு  ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்களை  ‘தமிழ் மரபுத் திங்கள்’ என அறிவித்ததன் மூலம்  பொருள், கல்வி, கலை, பண்பாட்டுத் துறைகளில் கனடிய சமூகத்திற்கு தமிழ்க்  கனடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்மரபு பற்றிய அறிவை  வளர்க்க உதவும். அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதையும் பேரளவு எளிதாக்கும்.  

கனடிய அரசினால் அளிக்கப்பட்டுள்ள இந்த ஒப்புதலை நாம் செவ்வனப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது பிள்ளைகளுக்கு செம்மொழியான தமிழ்மொழியைக் கற்பித்துக் கொடுப்பதன் மூலமும்  அவர்களது அடையாளத்தைக் குறிக்க  தனித்தமிழில் அழகான பெயர்களை சூட்டுவதன் மூலமும்   எமது தனித்தன்மையை இந்த நாட்டில் நன்கு பேணிக் காக்கலாம்.